புது இடம், புதிய சூழல் என்பதால் தூக்கம் வரவில்லை. இருந்தாலும்.. கண்களை மூடியபடி கிடந்தான் ஆதவன். மனதுக்குள் நிறைய ஓடியது.
அப்பாவின் நினைவு வந்தது.. வாத்தியார்... மாணவர்களுக்கு மட்டுமல்ல.. எங்களுக்கும்தான்.. பாசம் இருக்கும், அக்கறையும் இருக்கும்.. கூடவே கிடுக்கிப்பிடி கண்டிப்பும் இருக்கும். வீட்டில் அவர் இருந்தால் அப்படி ஒரு அமைதி நிலவும்.. புக்கை எடுத்து படிப்பது போல ஆளாளுக்கு ஆக்ஷன் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென புத்தகத்தை வாங்கி ஏதாவது கேள்வி கேட்டு மாட்டி அதற்குப் பிறகு வாங்கும் அடி இருக்கே.. மறக்க முடியாத சம்பவங்கள்.
ஆதவனுக்கு ஆதர்ச ஹீரோ அவனது தந்தைதான்.. எல்லோருக்கும் அப்படித்தானே.. அப்பாவைப் பார்த்துதான் ஒவ்வொரு பிள்ளையும் வளரும். அப்பா என்ன பேசுகிறார், அப்பா எப்படி நடந்து கொள்கிறார், அப்பாவின் அறிவு, அப்பாவின் முடிவெடுக்கும் திறன் என ஒவ்வொன்றையும் பிள்ளைகள் பார்த்துப் பார்த்துத்தான் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதனால்தான் சொல்வார்கள், அப்பாக்கள் சரியாக இருந்தால் அவர்களின் பிள்ளைகளும் சரியாக இருக்கும் என்று.
அப்பாவின் மறைவு ஆதவனுக்கு மிகப் பெரிய இழப்பு. இந்த நிமிடம் வரை அதை அவன் உணர்ந்து கொண்டே இருக்கிறான். அவன் கற்றுக் கொண்ட பல விஷயங்களுக்கு குரு அப்பாதான். அவரது தைரியம், அவரது துணிச்சல், அவரது நிதானம், ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிப்பது, முடிவெடுத்த பிறகு அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
"அப்பா.. உங்க கூட இருந்த ஒவ்வொரு நாளும் அப்படியே நினைவில் இருக்கு.. நீங்க இல்லாத ஒவ்வொரு நாளையும் நான் கஷ்டத்தோடுதான் கடந்திருக்கேன்.. ஆனால் உங்களை நினைச்சுட்டேதான் ஒவ்வொரு விஷயத்தையும் பண்ணிருக்கேன்.. என் பாதை சரியாகத்தான் இருக்கு.. இன்னிக்கு தனியா இங்கே வந்து படுத்திருக்கேன். பயமா இல்லை.. ஆனால் எனது வயது என்னை அச்சுறுத்துகிறது. எனக்கும் வயசாக ஆரம்பிச்சிருச்சுப்பா.. ஆனால் அதுக்காக பயப்படலை... கடமைகள் நிறைய இருக்கு.. எல்லாத்தையும் நான் சரியா செய்யணுமே அப்படிங்கிற கவலை இருக்கு.. இதுவரை நான் சரியாத்தான் போயிருக்கேன்.. என்னால் யாரும் பாதிக்கப்படலை.. யாரையும் நான் கஷ்டப்படுத்தலை.. அப்படியே அப்பா போலவே என்றுதான் எல்லோரும் சொல்லும் வகையில் வாழ்ந்துட்டிருக்கேன்.. அதை பெருமையாகவும் உணர்றேன்.. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கு.. இந்தப் பயணத்தில் கூடவே இருங்க".. ஆதவனின் கண்களிலிருந்து உருண்டோடியது கண்ணீர்.
வாத்தியார் என்பதால் அவரிடம் கண்டிப்பும் இருக்கும், கூடவே அன்பும் இருக்கும். அடிக்கிற கைதான் அணைக்கும் என்று சொல்வார்கள். அவரும் அப்படித்தான்.. தப்பு செய்து விட்டால்.. பேச்சே கிடையாது.. அடிதான்.. அடி வாங்கி வளர்ந்த அந்தக் காலத்து "கிட்ஸ்"களில் ஒருவன்தான் ஆதவனும். ஆனால் அடித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே "பையா" என்று அவர் அழைக்கும்போது அப்படியே எல்லாம் மறந்து போய் விடும்.. பையா என்று அவர் அழைத்தாலே.. அவரிடமிருந்து கோபம் போய் விட்டது என்று அர்த்தம்.. அதுதான் அப்பா. சொல்லிக் கொடுக்காமலேயே வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தவர். கையில் கால் காசு இருக்காது.. ஆனாலும் திடமாக இருப்பார், மகிழ்ச்சியாக இருப்பார்.. தைரியமாக இருப்பார். கையில் காசு இருந்தாலோ.. அது அவரிடமிருந்து யாருக்காவது மின்னல் வேகத்தில் கை மாறிப் போயிருக்கும்.. இருக்கும் காசை இல்லாதவர்களிடம் கொடுத்து விட்டு இவர் இல்லாமல் இருப்பதில் அப்படி ஒரு சந்தோஷம் அவருக்கு.
மனசுக்குள் என்னவெல்லாமோ ஓட அப்படியே தூங்கிப் போனான் ஆதவன்.
--
வழக்கமாக வீட்டில் 7 மணிக்கு வரும் விழிப்பு.. இன்று சீக்கிரமே வந்து விட்டது. இருள் மெல்ல விலகி வெளிச்சம் ஜன்னல் வழியாக தலையணையைத் தீண்டிக் கொண்டிருந்தது. விடிந்து விட்டதா என்று மனதுக்குள் சொல்லியபடியே மெதுவாக எழுந்தான் ஆதவன். தூக்கம் தடை பட்டு விட்டது. இனி தூக்கம் வருமா என்று தெரியவில்லை. மணியைப் பார்த்தால் 5.30 என்று காட்டியது.
அதுக்குள்ளேயே எழுந்துட்டோம் என்று நினைத்தபடி அறையைத் திறந்து வெளியில் பார்த்தான். காரிடாரில் மயான அமைதி. எல்லோரும் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள். அடடா.. நாம மட்டும்தான் முழிச்சிட்டோமா என்று எண்ணியபடி மீண்டும் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான்.
அப்படியே கொஞ்ச நேரம் போன நிலையில் 6 மணிக்கு மேல் ஒரு ஆயாம்மா வந்து கதவைத் தட்டி "டீ வேண்டுமா சார்" என்று குரல் கொடுக்க.. ரவிச்சந்திரன் டீ வாங்க பிளாஸ்க்கை கொடுத்து அனுப்பினார். ஆதவன் விழித்து விட்டதைப் பார்த்து ஒரு குட்மார்னிங் சொன்னார்.. பதிலுக்கு ஆதவனும் குட்மார்னிங்கை பகிர்ந்து கொண்டான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் எழுந்து காலைக் கடமைகளை முடித்த ஆதவனை, டிபன் எடுத்து வந்தவரின் குரல் தட்டியது.
"சார் இஞ்சிக் குடிநீர், டிபன்" என்று சொன்ன அந்த சேவகரிடமிருந்து இரண்டையும் கலெக்ட் செய்து கொண்டான் ஆதவன்.
"இது என்ன சார் இஞ்சிக் குடிநீர்" ரவிச்சந்திரனிடம் வினவினான் ஆதவன்.
"நல்லாருக்கும் சார்.. ஆனால் வெறும் வயித்தில் குடிக்காதீங்க.. சாப்பிட்ட பிறகு குடிங்க" என்று கூறினார் ரவிச்சந்திரன்.
இதனால் இஞ்சிக் குடிநீரை ஓரமாக வைத்து விட்டு டிபன் பார்சலைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான் ஆதவன். பரவாயில்லை, டிபன் நன்றாகவே இருந்தது. சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் கழித்து இஞ்சிக் குடிநீரைக் குடித்தான். சூடு குறையவில்லை, இதனால் குடிக்க இதமாக இருந்தது.
"அடுத்து என்ன சார் வரும்"
"கொஞ்ச நேரம் கழித்து கசாயம் வரும்.. கூடவே உடைச்ச கடலை கொடுப்பாங்க. பிறகு பால், முட்டை கொடுப்பாங்க.. அதுக்குப் பிறகு லன்ச் வரும். அது முடிந்த பிறகு பாலும், கற்றாழைச் சாறும் மாலையில் வரும். தொடர்ந்து டின்னர் தருவாங்க" என்று மெனு கார்டை அழகாக ஒப்புவித்தார் ரவிச்சந்திரன்.
"வாவ்.. சூப்பர் சார்" என்று புன்னகைத்தபடி வீட்டுக்குப் போன் போட்டான் ஆதவன்.
ஆதவன் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்புதான் மனைவியும், மாமனாரும் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாள் வாசத்துக்குப் பின்னர் வீடு திரும்பியிருந்தனர். வீட்டில் இப்படி ஒரே நேரத்தில் பலருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது இதுவே முதல் முறை.. அவர்கள் வீடு திரும்பியதும் இவன் வந்து படுத்துக் கொண்டு விட்டான். வீட்டினரின் நல விசாரிப்புக்குப் பின்னர் ரவிச்சந்திரனிடம் திரும்பினான் ஆதவன்.
அவரிடம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ரத்த சாம்பிள் எடுக்க ஆள் வந்து விட்டார்கள். முதலில் இசிஜி பார்த்தனர்.. அடுத்து பிளட் எடுத்தனர். இடது பக்க கையில் முதலில் எடுத்தார்கள். ஆனால் ரத்தம் வரவில்லை. வராவிட்டால் என்ன செய்யனும்.. விட்டு விட்டு வலது கைக்குப் போக வேண்டும் இல்லையா.. ஆனால் அந்தத் தம்பியோ சிரிஞ்சை வைத்து அப்படியும் இப்படியும் ஆட்டினார்.. என்னய்யா இது பொங்கலுக்குக் கிண்டுவது போல பண்றானே என்று பீதி அடைந்த ஆதவன், தம்பி பார்த்து என்று சொல்ல வாய் திறப்பதற்குள் ரத்தம் வந்து விட்டது.. நல்ல வேளை தப்பிச்சுச்சு என்னோட ரத்த நாளம் என்று மனசுக்குள் ஆறுதல் பட்டுக் கொண்டான் ஆதவன்.
எல்லாம் சுபமாக முடிந்ததைத் தொடர்ந்து எழுந்து வெளியில் வந்தான் ஆதவன். மீண்டும் ஒரு காரிடார் வாக்.. ஜன்னல் விசிட்.. அது போரடித்து விட்டது என்பதால்.. அப்படியே ஹாலுக்கு போனான். நர்சுகளைக் காணவில்லை. தண்ணீர் பிடிக்க ஒரு மினி கூட்டம் நின்று கொண்டிருந்தது. வலது பக்கம் திரும்பினால் ஐசியூ 1 கண்ணில் பட்டது. பரந்து விரிந்த பெரிய ஹால் அது.. கிட்டத்தட்ட 50 பேர் வரை அங்கு படுக்க வைக்கலாம். அவ்வளவு பெரிய ஐசியூ.. அதற்குப் பக்கத்தில் இடது புறம் ஐசியூ 2 உள்ளது. அதற்கு அருகில் மினி ஐசியூவும் உள்ளது. முதல் தளத்தில் கிட்டத்தட்ட 170 பேர் வரை தங்க முடியும். இதுபோல மொத்தம் நான்கு தளங்கள் அங்கு உள்ளன. பெரிய அளவில் நோயாளிகள் கூட்டம் இல்லை என்ற போதிலும் நோயாளிகள் அடுத்தடுத்து வந்தவண்ணம்தான் உள்ளனர். பெரும்பாலும் வயதானவர்கள்தான்.
ஹாலில் இருந்த இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்தபடி எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன். பிறகு மெல்ல எழுந்து அறைக்குத் திரும்பினான்.. வழியில் ஆதி நாராயணன் குறுக்கிட்டார்.
(தொடரும்)
Comments