Skip to main content

"எப்ப வருவீங்கன்னே கேட்கிறான்.. ஒரே டென்ஷனா இருக்கு".. உலாப் போகும் உணர்வுகள் (6)


"குட்மார்னிங் சார்.. எப்படி இருக்கீங்க இப்போ"

"பரவாயில்லை தம்பி.. வயிறுதான் சரியில்லை"

"சரியாய்ரும்.. சாப்பிடாம மட்டும் இருக்காதீங்க.. பையன் பேசினாரா"

"பேசினான் எப்ப வருவீங்க.. எப்ப வருவீங்கன்னே கேட்கிறான்.. ஒரே டென்ஷனா இருக்கு"

"குழப்பிக்காம இருங்க.. உடம்புதான் முக்கியம். அவர் போகிறபடி போகட்டும்.. நீங்க உடம்பை சரி பண்ணிட்டுப் போங்க. அதான் நல்லது. இது சாதாரண வியாதின்னா பரவாயில்லை, சிக்கலான வியாதி. கவனமா இருக்கணும். உங்களுக்கும் வயசு அதிகம். அதையும் மறந்துடாதீங்க"

"ஆமா.. அதான் அவனுக்கு சமாதானம் சொல்லிட்டு நானும் பொறுமையா இருக்கேன்"

"சரி சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க.. அப்புறம் வர்றேன்"

அறையை நோக்கி நடை போட்டான் ஆதவன்.. ரவிச்சந்திரன் பக்காவாக தயாராகி யோகா செய்து கொண்டிருந்தார்.

"சார் 11 மணி போல ஆவி புடிக்க வருவாங்க.. அவங்களே யோகாவும் சொல்லித் தருவாங்க.. நான் ரொம்ப தீவிரமாக இதை பாலோ பண்ண ஆரம்பிச்சிருக்கேன். மூச்சுப் பயிற்சி ரொம்ப உதவியா இருக்கு. நீங்களும் தொடர்ந்து பண்ணுங்க"

"ஓ.. கண்டிப்பா சார்"

ஆவி பிடிப்பது புதிதில்லை.. தொடர்ந்து செய்து வரும் பழக்கம்தான். அதுவும் இந்தக் கொரோனா வந்தது முதல் இந்தியாவின் "தேசிய புகை" ஆவி என்று சொல்லும் அளவுக்கு மக்கள் ஆவிக்கு நெருங்கியவர்களாகி விட்டனர். அதிலும் முதல் கொரோனா அலையின்போது ஆவி பிடிப்பதை வைத்து நடந்த கூத்துக்கள் பேசு பொருளாகியிருந்தன.

கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டான் ஆதவன். செல்போனை எடுத்து பாட்டு கேட்க ஆரம்பித்தான். கண்ணை மூடி அப்படியே கிடந்ததும், பாட்டுக் கேட்டதும் பொழுதை சற்றே நகர்த்த உதவியது. உண்மையில் இப்படி படுத்துக் கிடப்பதும், ரெஸ்ட் எடுப்பது போரான விஷயம்தான். ஆனால் இப்படியெல்லாம் ரெஸ்ட் கிடைப்பது வாழ்க்கையில் மிக மிக அரிய விஷயம் என்பதால் இதையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

ரவிச்சந்திரன் சொன்னது போல பத்தரை மணி வாக்கில் யோகா சொல்லித் தருபவர் கையில் ஆவி மெஷினோடு வந்தார். குட்மார்னிங் சொல்லி அவரை உள்ளே வரவேற்றார்கள் ஆதவனும், ரவிச்சந்திரனும். 

"சார் .. அந்த ஃபேனை ஆஃப் பண்ணிடுங்க"

இரு மின்விசிறிகளும் ஆஃப் செய்யப்பட்டன. முதலில் ஆவி பிடிப்பது அரங்கேறியது. இருவரும் மாறி மாறி ஆவி பிடித்த பின்னர் யோகா குறித்து அந்த டாக்டர் கேட்டார்.

ரவிச்சந்திரன் தனக்குச் சொல்லிக் கொடுத்த யோகாவை செய்து காட்டினார். குட் என்றார் டாக்டர்.

ஆதவன் பக்கம் திரும்பிய அவர், நீங்க செய்தீர்களா சார் என்று கேட்டபோது, இல்லை டாக்டர் நேற்றுதான் நான் அட்மிட் ஆனேன் என்று கூறவே, ஆதவனுக்கு மூச்சுப் பயிற்சிக்கான யோகாவை செய்து காட்டினார் டாக்டர்.

ஆதவனும் அவர் சொன்னதைத் திரும்பச் செய்தான். செய்வதற்கு எளிதாகவே இருந்தது. தினசரி இதைத் தவறாம பண்ணுங்க என்று அட்வைஸ் கொடுத்து விட்டு கிளம்பினார் அந்த நேச்சுரோபதி டாக்டர்.

டாக்டர் அந்தப் பக்கம் நகரவும், இந்தப் பக்கம் பால் , முட்டை வரவும் சரியாக இருந்தது. அடடா பாம்புக்கு வைப்பது போல கொடுக்கிறாங்களே என்று நினைத்துக் கொண்டே பாலையும், முட்டையையும் வாங்கிக் கொண்டான் ஆதவன்.

அது அவித்த முட்டை. ஓடு உரிக்காமலேயே கொடுத்தனர். சூடாக இருந்த பாலை முதலில் குடிக்கலாம் என்று வாயில் ஊற்றியபோது சப்பென்று இருந்தது. அடடே, சர்க்கரை போடலை போலயே என்று நினைத்த ஆதவன் வேறு வழியில்லாமல் அப்படியே வாயில் ஊற்றிக் கொண்டான். இப்படி சர்க்கை கலக்காத பால் தருவார்கள் என்று யாருக்குத் தெரியும்.. வீட்டிலிருந்து எதையெல்லாம்தான் எடுத்து வருவது! முட்டையை லன்ச்சுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று தூக்கி டப்பாவில் வைத்து விட்டான்.

"இன்னும் ஒரு 2 மணி நேரத்துக்கு யாரும் வர மாட்டாங்க சார்.. அதுவரைக்கும் நாம தூங்கி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்" ரவிச்சந்திரனிடமிருந்து வந்த அந்த செய்தி ஆறுதலாக இருந்தது. பிரேக் இல்லாமல் கொஞ்சம் தூங்கலாம் என்று எண்ணி படுக்கையில் படுத்துக் கொண்டான் ஆதவன்.

தூக்கம் வரவில்லை.. ஆனாலும் சோர்வாக இருப்பது போலத் தெரிந்ததால் பாதி மயக்கமும், தூக்கமுமாக அந்தப் பொழுது கடக்க ஆரம்பித்தது. அப்போது எதிர்புற அறையில் கடபுடவென சத்தம் கேட்டது. அப்படியே தலையை மட்டும் தூக்கி எதிர் அறையைப் பார்த்தான் ஆதவன்.

பாட்டிகளில் ஒருவர் வாந்தி எடுத்து விட்டார் போல. அதை கிளீன் செய்ய வந்திருந்தனர் 2 ஆயாமார்கள். அவர்கள் பாட்டியுடன் பேசியது இங்கு ஆதவன் காதிலும் விழுந்தது. 

"இப்படியா பாட்டி பண்ணுவீங்க.. எத்தினிவாட்டி சொல்வது.. அதுவும் பெட்டிலேயே பண்ணிட்டீங்களே" என்று ஒரு ஆயா சொல்வது ஆதவன் காதில் விழுந்தபோது.. பாவமாக இருந்தது. அந்தப் பாட்டிக்கு வயது அதிகம். அவரால் முடியவில்லை போலும். சாப்பிட சாப்பிட வாந்தி எடுக்கிறார். அதை சுத்தம் செய்யும் தெம்பும் அவரிடம் கிடையாது. யாராவது வந்துதான் சரி செய்ய வேண்டும். சுகாதாரப் பணியாளர்களும் மனிதர்கள்தானே.. அவர்களும் ஒவ்வொரு முறையும் பாட்டியிடம் சொல்லித்தான் செல்கிறார்கள். ஆனால் பாட்டிக்குத்தான் உடல் வலு இல்லையே.. என்ன செய்வது.. யாரையும் இங்கு குற்றம் சொல்ல முடியாது.. அதே அறையில் இருந்த இன்னொரு பாட்டி இந்த சம்பவங்களையெல்லாம் அமைதியாக பார்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தார்.. இங்கே ஆதவனும்.

தூக்கம் தடைபடவே எழுந்து வெளியே வந்தான்.. காரிடார் வாக் தொடங்கியது. லுங்கியைத் தூக்கிக் கட்டியபடி அங்குமிங்குமாக நடக்கத் தொடங்கினான். சிறிது நேர நடைக்குப் பிறகு மீண்டும் அறை. ரவிச்சந்திரன் தூக்கம் கலைந்து எழுந்திருந்தார். ஆதவனுடன் பேசத் தொடங்கினார் ரவிச்சந்திரன்.

"எத்தனை வருஷமா ஜர்னலிசத்தில் இருக்கீங்க ஆதவன்"

"கிட்டத்தட்ட 30 வருஷமாச்சு சார்.."

"ஓ கிரேட்.. இந்த ஆஸ்பத்திரி அனுபவத்தையும் கூட எழுதுங்க சார்"

"கண்டிப்பா சார்.. நிச்சயம் எழுதணும்"

"உண்மையிலேயே இந்த ஹாஸ்பிட்டல் ஆம்பியன்ஸ் அருமையா இருக்கு. பிரமாதமாக வச்சிருக்காங்க.. சுத்தமா இருக்கு. எல்லோரும் நல்லா கவனிக்கிறாங்க. யாரையுமே குறை சொல்ல முடியாது. சிஸ்டர்ஸ் எல்லோரும் ரொம்ப பொறுமையா பேசறாங்க. டாக்டர்ஸும் நல்லா பேசறாங்க..  உண்மையிலேயே பாராட்ட வேண்டும்"

"உண்மைதான் சார்.. மருந்து வாசனையே இல்லாத அரசு மருத்துவமனையை இப்பத்தான் பார்க்கிறேன். நானும் கூட எதிர்பார்க்கலை.. மருந்துகளே கூட தேவையில்லாமல் தரவில்லையே.. எனக்கே வெறும் விட்டமின் மாத்திரைகள்தான் கொடுத்திருக்காங்க"

"எனக்கும் வந்த 3 நாட்களுக்கு மருந்துகள் கொடுக்கலை சார். பிறகுதான் ஆன்டிபயாடிக்ஸ் ஊசி ஆரம்பிச்சாங்க.. டெய்லி 2 ஊசி. அதுதான் உடம்பை டயர்டாக்கிருச்சு. பட் அவங்களை குறை சொல்ல முடியாது.. அவங்க கடமையைச் செய்றாங்க.. நாம அதுக்கு ஒத்துழைப்பு கொடுத்துத்தான் ஆகணும்"

"தேவைங்கிறதலாதான் ஊசி போடுறாங்க சார். உடம்பு சோர்வு கண்டிப்பா இருக்கத்தான் செய்யும். டிஸ்சார்ஜ் ஆன பிறகும் கூட ஒரு மாதம் வரை இந்த சோர்வும், போஸ்ட் கோவிட் சின்ட்ரோமும் இருக்கும்.. கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கணும்"

"கரெக்ட் சார்.. நான் டெய்லி விடாம ஆவி பிடிச்சேன். கொஞ்ச நாளா ஆவி பிடிக்காம விட்டுட்டேன். வந்துருச்சு. இல்லாட்டி எனக்கு வந்திருக்காது. இன்னும் கொஞ்ச நாளில் பூஸ்டர் ஊசி போடக் காத்திருந்தேன். ஆனால் அதுக்குள்ள கொரோனாகிட்ட மாட்டிக்கிட்டேன்" என்று சிரித்தபடி கூறினார்.

பேசிக் கொண்டிருந்தபோதே லன்ச் வந்து விட்டது. கலவை சாதம் அடங்கிய லன்ச் அது. டப்பாவை வாங்கி ஓரமாக வைத்தான் ஆதவன்.

"சார்.. 1 மணி போல சீஃப் டாக்டர் வருவார். அவர் வந்ததும் சாப்பிடலாம்" என்று ரவிச்சந்திரன் கூறவே, சரி என்றான் ஆதவன்.

"சீஃப் டாக்டர் ரொம்ப சுருக்கமாதான் பேசுவார்.. என்ன எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா.. அவ்வளவுதான். ஆனால் இன்னொரு டாக்டர் இருக்கார் சார்.. நந்தகுமார்னு பேரு.. ரொம்ப நல்ல அப்ரோச். நாம டவுட் கேட்டா தெளிவாக்குவார். அவரும் நிறைய விளக்கம் கொடுப்பார். இன்னிக்கும் அவர் வருவார்னு நினைக்கிறேன்" என்று ரவிச்சந்திரன் கூற, பொறுமையாக கேட்டுக் கொண்டான் ஆதவன்.

இப்படியே பேச்சு தொடர சரியாக  1 மணி அளவில் தடபுடன்னு சத்தம்.

(தொடரும்)


7வது பகுதி

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்