டாக்டர்கள் குழு வந்து விட்டது. ஒவ்வொரு அறையாக விசிட் அடித்து நோயாளிகளிடம் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று கேட்டபடி வந்தனர்.
ஆதவன் அறைக்கு டாக்டர்கள் வந்தனர். சீஃப் டாக்டர் எப்படி இருக்கீங்க என்று கேட்டார். டூட்டி டாக்டர்களிடம் அவனது பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். பின்னர் நகர்ந்து சென்று விட்டார். என்னது இவ்வளவுதானா என்று கும்பிய நிலையில் தனக்கு வீஸிங் இருப்பது தொடர்பாக டூட்டி டாக்டருடன் நகர முயன்ற இன்னொரு டாக்டரிடம் கேட்டான். அவரது பெயர் நந்தகுமார்.
"ஸார்.. எனக்கு லேசா வீஸிங் மட்டும் இருக்கு"
"அது ஒன்னும் பயப்படத் தேவையில்லை. அதான் இன்ஹேலர் வச்சிருக்கீங்களே அதுவே போதும்."
"ஆக்சிஜன் லெவல் இம்ப்ரூவ் பண்ண என்ன பண்ணனும் சார். வீட்டில் பார்த்தபோது 93க்குக் கீழ் போயிருந்தது"
"பயப்படத் தேவையில்லை சார். கட்டிலில் குப்புறப் படுங்க" . படுத்துக் கொண்டதும், டாக்டர் முதுகில் மெல்ல நாலு குத்து குத்தினார். என்னது இவர் எம்பிபிஎஸ் டாக்டரா இல்லை மசாஜ் டாக்டரா என்ற சந்தேகம் வந்தது. அந்த அளவுக்கு மசாஜ் செய்வது போல முதுகில் வரிசையாக மெல்ல குத்து குத்தினார். சரி எதோ "அடைப்பு" எடுக்கிறார் போல என்று நினைத்துக் கொண்டான்!
"தூங்கப் போகும்போது இதேபோல ஒரு அரை மணி நேரம் குப்புறப் படுத்திருங்க.. ஆக்சிஜன் லெவல் தானாகவே சரியாய்ரும். இயல்புக்கு வந்துரும். கொரோனா சரியான பிறகும் கூட தினசரி இப்படிப் படுக்கலாம். அரை மணி நேரம் குப்புறப்படுத்து விட்டு பிறகு உங்க சவுகரியம் போல படுத்துக்கங்க.. ஒரு பிரச்சினையும் இல்லை" சிரித்தபடி விளக்கம் அளித்து விட்டு நகர்ந்தார் நந்தகுமார்.
எடுத்ததுக்கெல்லாம் ஊசி, மாத்திரை, டிரிப்ஸ், அது, இது என்று பயமுறுத்தும் தனியார் மருத்துவமனைகள் மனதில் வந்து போயின. ஒரு தனியார் மருத்துவமனையில் எந்த அளவுக்கு பொறுமையாக நோயாளிகளிடம் பேசுவார்களோ, விளக்குவார்களோ, புரிய வைப்பார்களோ.. அதே அளவுக்கு இங்கும் டாக்டர்கள் இருப்பது வியப்பான விஷயம்தான். காரணம், இதுபோலெல்லாம் நாம் முன்பு பார்த்ததில்லை. சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள பல நல்ல மாற்றங்களில் இதுவும் ஒன்று.
டாக்டர்கள் போனதும் இருவரும் சாப்பாட்டை எடுத்துக் கடை விரித்தனர். சாதம், சாம்பார், ரசம், மோர், 2 விதமான காய்கறிகள் என்று சாப்பாடு தடபுடலாக இருந்தது. வழக்கம் போல உப்பு, காரம் சரியாக இல்லை. ஆனால் சாப்பாட்டில் குறையில்லை.. சிறப்பாக சாப்பிட்டு முடித்தனர்.
கொஞ்சம் வாக் போய் விட்டு வந்து படுக்கலாம் என்று வெளியே வந்தான். காரிடாரில் கடைசி அறை பெரியவர் வாக் போய்க் கொண்டிருந்தார். அவர் அந்தப் பக்கம் போக இவன் இந்தப் பக்கமிருந்து நடக்க ஆரம்பித்தான். இடையில் இருவரும் குறுக்கிடவே குசல விசாரிப்புகள் தொடங்கின.
"எப்படி இருக்கு சார் இப்போ"
"பரவாயில்லைங்க.. 2 நாளில் டிஸ்சார்ஜ் ஆயிடலாம்னு டாக்டர் சொல்லிருக்கார்"
"ஓ.. சூப்பர் சார்.. வீட்டுக்குப் போனாலும் குறைந்தது 15 நாளைக்குக் கவனமா இருங்க.. மாத்திரைகளை கரெக்டா சாப்பிடுங்க, விட்ராதீங்க. உடம்பைப் பார்த்துக்கங்க. மேடம் நல்லாருக்காங்களா"
"அவங்க நேத்தே சரியாய்ட்டாங்க. எனக்காகத்தான் அவங்களும் கூடவே இருக்காங்க"
" ஓ.. அப்படியா.. ஆமா வேற என்ன சார் பண்றது. உங்களை தனியா விட்டுட்டுப் போக முடியாதே"
"ஆமாங்க சார்.. சரி நான் வர்றேன்"
அவர் அறையை நோக்கி நகல, இவன் வாக்கிங்கைத் தொடர்ந்தான். வாக்கிங்கை முடித்து விட்டு அறைக்குள் நுழைந்து கட்டிலில் ஏறி படுத்தான். இன்று கொஞ்சம் சோர்வாக உணர்ந்ததால் அடிக்கடி தூங்க வேண்டும் போல இருந்தது. ஒருக்களித்தபடி படுத்துக் கொண்டு கண்ணை மூடியவனுக்கு மனதில் மகனின் நினைவு வந்தது.
என்ன செய்து கொண்டிருப்பான் அகிலன்.. என்ன செய்யப் போகிறான்.. அவனது எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது.. என்ன செய்யலாம் அவனை.. அடுத்தடுத்து கேள்விகள் வரிசையாக மனதுக்குள் வந்து எழுந்தன.
ஒரு தந்தையாக நாம் அவனுக்கு பெரிதாக எதையும் செய்யவில்லையோ என்ற கேள்வி ஆதவனுக்குள் அவ்வப்போது எழுந்து மனதை உறுத்தும். ஆனால் மனதின் மறுபக்கமோ, அப்படியெல்லாம் இல்லை. அவனது திறமையை கண்டறிந்து அவனுக்கு சுட்டிக் காட்டியதே நீதானே என்று சமாதானம் சொல்லும். இரு விதமான விவாதங்கள் அடிக்கடி அரங்கேறும்.
திறமையைச் சுட்டிக் காட்டினோம்.. வழிகாட்டினோம்.. இதுதான் உனது பாதை என்பதையும் புரிய வைத்தோம்.. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் எதுவுமே நகராமல் நின்று விட்டதே என்ற எண்ணம் மனதை சற்றே அழுத்தியது.. ஆனால் மனதில் ஒரு நம்பிக்கையும் கூடவே வந்தது.. அவன் நம்மை விட திறமையானவன், புத்திசாலி.. தைரியமும் அதிகம்.. தனது திறமை மீதும், தனது எதிர்காலத்தின் மீதும் நிறைய நம்பிக்கை வைத்துள்ளான். நம்மைப் போல அவனுக்குக் குழப்பம் இல்லை. தெளிவாகத்தான் இருக்கிறான்.. காலம் அவனை சரியான பாதையில் ஒரு நாள் இட்டுச் செல்லும்..
ஒருமுறை இருவருக்கும் இடையே ஒரு விவாதம் ஓடியது.
"அகிலா.. நீ இதுமாதிரி செய்தால் என்ன.. உனக்கு பொருத்தமா இருக்கும்.. உனக்கு ஒரு அடையாளமாகவும் இருக்குமே.."
"கண்டிப்பா செய்யலாம்ப்பா.. ஆனால் உங்க ஐடியா ரொம்ப மொக்கையா இருக்குப்பா.. இதை விட பெட்டரா நான் பண்ணுவேன்ப்பா"
"ஐடியா மொக்கையா இருக்கலாம்டா.. ஆனால் உனக்கு ஒரு அறிமுகம் கிடைக்க இப்படிச் செய்யலாம்ல.. கார்த்திக் சுப்புராஜ் கூட ஷார்ட் பிலிம் எடுத்துத்தான் பெரிய திரைக்கு அறிமுகமானார். நீ கூட செய்யலாமே"
"நான் பார்த்துக்கறேன்ப்பா.. நீங்க கவலைப்படாம ரெஸ்ட் எடுங்க"
உண்மையில் நம்ம ஐடியாக்கள் மொக்கையாகத்தான் இருக்குதோ என்ற சந்தேகம் வந்தது.. எல்லா அப்பாக்களும் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் சந்திக்கும் அதே "அட்டாக்"தான்.. ஆனால் நமக்கு மட்டும்தான் இது கொஞ்சம் வலிக்கிறதோ என்ற எண்ணமும் மண்டையைக் குடைந்தது. அத்தோடு அந்த விவாதத்தை நிறுத்தி விட்டு நகர்ந்து விட்டான்.. விவாதத்தைத் தொடர்ந்தால் அது வேறு மாதிரி போய் விடும் என்ற "பயம்"தான் காரணம்!
அகிலனுக்கு நிறைய திறமை உண்டு. நல்லா பேசுவான்.. எந்த டாப்பிக்காக இருந்தாலும் பேசுவான்.. சினிமா மீது அத்தனை உயிர்.. அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறான்.. மணிக்கணக்காக பேசக் கூடிய திறமை இருக்கு. கிரியேட்டிவிட்டியில் தன்னைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டான் என்ற பெருமை ஒரு தந்தையாக ஆதவனுக்கு எப்போதுமே உண்டு. ஆனால் உரிய காலத்தில் எதையுமே பயிர் செய்தால்தானே அதற்குப் பலன் உண்டு என்ற கவலை எப்போதும் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.. பார்ப்போம்.. .. விதம் விதமாக எண்ணங்கள் ஓட.. அப்படியே தூங்கிப் போனான்.
(தொடரும்)
Comments