Skip to main content

"முதல் காதலின் செல்லப் பிள்ளைகள்"... உலாப் போகும் உணர்வுகள் (8)


2வது நாள்.. மாலைக்கு மேல் நிறைய நோயாளிகளின் வருகையைப் பார்க்க முடிந்தது. பெரும்பாலானோர் வயதானவர்கள்தான். முதல் தளத்தில் மொத்தம் 3 காரிடார்கள் உள்ளன. இருபக்கமும் தலா 4 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும்  3 பேர் தங்க முடியும். ஆக ஒரு காரிடாருக்கு மொத்தம் 24  நோயாளிகள் தங்கும் வசதி உண்டு. 2, 3வது காரிடாரிலும் இதேபோலத்தான். 

ஆதவன் தங்கியிருந்த முதல் காரிடாரில் உள்ள பெரும்பாலான அறைகள் 2 நாட்களாக காலியாக இருந்தன. ஆனால் 3வது நாளில் பெரும்பாலான அறைகள் நிரம்பத் தொடங்கி விட்டன. அவன் இருந்த அறைக்கு எதிர்புறத்தில் ஒரு அரசு அதிகாரி வந்து அட்மிட் ஆனார். 

பேன்ட், சஃபாரியுடன் டிப்டாப்பாக வந்த அவரைப் பார்த்ததுமே தெரிந்தது கண்டிப்பாக இவர் ஒரு "ஆபீசர்"தான் என்று. சரி, அறைக்கு வந்ததும் சஃபாரியைக் கழற்றி பனியனுக்கோ, சாதாரண சட்டைக்கோ அல்லது டி சர்ட்டுக்கோ மாறுவார் என்று பார்த்தால் லுங்கியும், சஃபாரியுமாக வித்தியாசமான கோணத்தில் காணப்பட்டார். ரொம்ப நேரமாக சஃபாரியைக் கழற்றவே இல்லை.

வந்த வேகத்தில் அவருக்கு டிரிப்ஸ் ஏற்றி படுக்க வைத்து விட்டனர். அப்போதும் சஃபாரியிலேயே படுத்துக் கிடந்தார் மனிதர். ஆகா.. தீவிரமான அரசு ஊழியர் போல என்று நினைத்துக் கொண்டான். டிரிப்ஸ் முடிந்த பிறகு அவர் மெல்ல வெளியே வந்தார். 

ஆதவன் அறைக்கு அருகே வந்து "எத்தனை நாளா இருக்கீங்க" என்று கேட்டார்.. 

நான் வந்து 4 நாளாச்சு சார்  என்று ரவி கூற, நான் 2 நாள் சார் என்று ஆதவன் கூறவே, சரி சரி என்று கூறியபடி அவரது அறைக்குத் திரும்பப் போய் விட்டார். 

இரவு 9 மணிக்கு மேலாகி விட்டது.. சரி படுக்கலாம் என்று யோசித்தவனுக்கு பிளாஸ்க்கில் தண்ணீர் இல்லாதது தெரிய வந்தது. ஹால் வெறிச்சோடிக் கிடந்தது. பெண் டூட்டி டாக்டரும், ஒரு நர்ஸும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும்.

பிளாஸ்க்கை கழுவி விட்டு தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தபோது அவர்கள் இருவரும் பேசியது நன்றாகவே காதில் விழுந்தது.

"இப்பெல்லாம் எப்படி டாக்டர் .. வந்து கூப்பிட்டுக்குவாங்களா சார்"

"அதெல்லாம் காதலிச்ச சமயத்தில்தான்.. அப்பதான் நமக்கு அவங்க அடிமை.. கல்யாணம் ஆயிருச்சுன்னா அவங்களுக்கு நாம அடிமை"

"ஹாஹாஹாஹா"

"காதலிச்ச சமயத்துல எப்படி வருவார் தெரியுமா.. நான் போற ஒரு இடத்தைக் கூட மிஸ் பண்ண மாட்டார். கிளாஸ் முடிஞ்சதும் நான் வண்டியை எடுக்கப் போற இடத்துல வந்து கரெக்டா நின்னுக்குவார்.. அதேபோல காலையிலும் ஒரு அட்டென்டென்ஸ்.. விடாம விரட்டுனாப்ள... இப்பெல்லாம் நாம போய் நின்னாக் கூட.. ஒரு அலட்சியப் பார்வைதான்"

"கல்யாணம் பண்ணாலே இப்படித்தானா டாக்டர்"

"அப்படியெல்லாம் இல்லை.. காதல்லாம் இருக்கு.. அது குறையல.. ஆனால் அலட்சியம் ஜாஸ்தியாய்ருச்சு"

காதைக் கன்ட்ரோல் செய்ய நினைத்தும் முடியலை.. வந்து விழுந்த அந்த "காதல் கதையை" கேட்டபடியே தண்ணீர் பிடித்துக் கொண்டு அறைக்கு திரும்பினான்.

முதல் அலையின்போது டாக்டர்களும், நர்ஸ்களும் பட்ட பாடு இன்னும் கூட மறக்கவில்லை. அந்த அளவுக்கு கழுத்தைப் பிடித்து இறுக்கியிருந்தது கொரோனா பரவல். படுக்கை கிடைக்கவில்லை, ஆஸ்பத்திரிகளில் இடமில்லை, நிரம்பி வழிந்தன. மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். 2வது அலையில் நிலைமை இன்னும் மோசமானது. ஆனால் இந்த 3வது அலையில் பெரும் நிம்மதியுடன் மருத்துவர்களும், நர்ஸ்களும் பிற சுகாதாரப் பணியாளர்களும் இருப்பதைப் பார்க்க முடிந்தது. இப்படி ஆற அமர காதல் கதையெல்லாம் பேசக் கூடிய அளவுக்கு அரசு மருத்துவமனை ஃப்ரீயாக இருப்பதும் கூட மகிழ்ச்சியான விஷயம்தானே!

வெளியில் இருள் கவ்வ.. மனசுக்குள் நினைவுகள் கவிழ.. தூக்கம் கண்களைத் தழுவியது.

----

3ம் நாள் காலை.. நேரம் 10 மணி.

ஆதி நாராயணனின் மனைவி கையில் போனுடன் காரிடாரில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார். அவரது முகத்தில் பதட்டம், கண்களில் கவலை.. என்னாச்சுன்னு தெரியலையே.. அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக நின்றிருந்தான். பேசி முடித்து விட்டு அவர் திரும்பியபோது, இவனைப் பார்த்து விட்டு அருகில் வந்தார்.

"என்னாச்சும்மா"

"அவன்தான்"

"என்னவாம்"

"எப்ப வர்றீங்கன்னு கேட்டு சத்தம் போடறான்.. நான் என்ன செய்றது.. டாக்டர் ஸ்டிரிக்ட்டா இப்ப அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டார். இவரோ போகலாம் போகலாம்னு தொல்லை பண்றார். இவன் வா வான்னு படுத்தறான்.. இதுல யாரை சமாதானப்படுத்துறதுன்னே தெரியலை"

"உங்க பையன் கிட்ட சொல்லிடுங்க.. நீ போற மாதிரி கிளம்பிப் போப்பா.. எங்களை எதிர்பார்க்காதேன்னு சொல்லிடுங்க.. இன்னும் 2 நாள்தானே.. சரியாய்டும்.. நீங்க கிளம்பிப் போய்டலாம்.. தேவையில்லாமல் குழப்பிக்காதீங்க"

அதற்குள் பக்கத்து அறையிலிருந்த பெண்மணி வெளியே வந்தார். அவர் ஏற்கனவே ஆதி நாராயணன் தம்பதியுடன் பழக்கமாயிருந்தார் போலும்.

"நானும் சொன்னேன் சார்.. இவங்க என்ன பண்ணுவாங்க பாவம்.. பையன் பிடிவாதமா இருக்கான்"

"சரிதான் மேடம்.. ஆனால் ரிஸ்க் எடுக்க முடியாதே.. அவருக்குப் புரிய மாட்டேங்குது"

கவலை கலந்த அந்த உரையாடலுக்குப் பின்னர் மூவரும் கலைந்து சென்றனர். மாத்திரையை எடுத்து வாயில் போட்டு தண்ணீரைக் குடித்தவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

"என்ன சார் தீவிர சிந்தனை"

"ஒன்னுமில்லை சார்.. சும்மாதான்"

"இப்பதான் எங்க அம்மா கிட்ட பேசினேன். என் அக்கா கிட்ட படிச்சுப் படிச்சுச் சொல்லியிருந்தேன். அம்மா கிட்ட நான் அட்மிட் ஆனதை சொல்லிடாதேன்னு.. அவங்க கேட்கலை. உளறிட்டாங்க.. இப்ப என் அம்மா என் கிட்ட கேட்கறாங்க. அவரை ஆவி பிடிக்கச் சொல்லிருக்கேன். கேட்க மாட்டேங்கிறாங்க.. தேவையில்லாமல் பதட்டமாவாங்க. அதனால்தான் நான் சொல்லாமல் இருந்தேன். அக்கா சொல்லிட்டாங்க. அவங்களுக்கு இப்போது 86 ஆகுது வயசு"

"எங்க அம்மாவுக்கும் அதே வயசுதான் சார்.. டீச்சரா இருந்தாங்க. அப்பாவும் டீச்சர். வீடு முழுக்க நிறைய டீச்சர்கள்தான்"

"ஓ... அருமை சார்.. நீங்க மட்டும் எப்படி இந்த ஃபீல்டுக்கு வந்தீங்க"

"படிச்சப்போது எழுத்து மேல ஒரு ஆர்வம் இருந்தது. கல்லூரி நண்பன் ஒருவனோட கவிதைகளை ரொம்ப விரும்பிப் படிப்பேன். அவனைப் பார்த்து நானும் எழுத ஆரம்பிச்சேன்.. காதலிக்காமலேயே காதல் கவிதைகளை ரசிச்சு ரசிச்சு எழுதுவேன்.. நல்லா இருக்குன்னு நண்பர்கள் சொல்லவே.. அப்படியே தொத்திக்கிச்சு.. நிறைய கவிதைகள் எழுதிருக்கேன்.. ஆனால் பலதை பேப்பரில் எழுதி எழுதி எங்காவது போட்டு விடுவேன். இப்படியே நிறைய கவிதைகள் காற்றோடு கலந்து காணாமப் போயிருச்சு. பத்திரப்படுத்தி வைக்கத் தோணலை. டிகிரி முடிச்சதும்  சயின்ஸ் ஜர்னலிசம் கோர்ஸில் சேர்ந்தேன். அதுல நான் சேர காரணம் எங்க அப்பாதான். அங்கதான் என்னோட வாழ்க்கை மாறியது. படிப்பை முடிச்ச கையோட தினமலரில் சேர்ந்தேன். இப்படித்தான் தொடங்கியது என்னோட பத்திரிகை வாழ்க்கை"

"உங்க வீட்டுல எழுத்தாளர்கள் யாராவது இருக்காங்களா"

"எழுத்தாளர்கள்னு யாரும் கிடையாது. எங்க தாத்தா எழுதுவார்னு கேள்விப்பட்டிருக்கேன். என்னோட அண்ணன் நல்லா பேசுவார், எழுதுவார். அடுத்து நான்.. இப்போ என்னோட மகன்.. அப்படியே தொடருது"

"அதான் சார்.. இதெல்லாம் மூதாதையர் ஜீன் சார்.. அப்படியே வழி வழியா வரும்.. நாம நினைச்சாக் கூட அதைத் தடுக்க முடியாது"

சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஒருமுறை நண்பர்களுடன் சென்றது நினைவுக்கு வந்தது. நல்ல மத்தியான நேரம் அது.. சரியான பசி.. சுந்தரமூர்த்தி, முத்துலட்சுமி  ஆகியோருடன் சாப்பாட்டுக் கடையை தேடி அலைந்து,  ஒரு தள்ளுவண்டிக் கடை கண்ணில் படவே.. அங்கு போய் சாப்பிட்டனர். சூப்பர் சாப்பாடு.. நல்லா நினைவிருக்கு.

சாப்பிட்டு முடித்ததும் செம டயர்ட்.. அப்படியே அங்கிருந்த புல்வெளி ஒன்றில் உட்கார்ந்தார்கள். ஆதவனுக்கு கை பரபரவென்று அரித்தது.. கவிதை எழுதியே ஆகணுமே இப்போது.. காரணம்.. மனதில் ஏதோ ஒன்று தோன்றியிருந்தது.. எடுத்தான் பேனாவை. ஸ்கிரிப்ளிங் பேடில் குட்டி குட்டியாக எழுதி எழுதி அதை அப்படியே கிழித்து கிழித்து சுந்தரமூர்த்தியிடம்  கொடுத்து "அண்ணே எப்படி இருக்கு" என்று கமென்ட் கேட்டான்.

அவர் படித்துப் பார்த்து விட்டு "அடடே சூப்பர்டா .. யாரை நினைச்சுடா தம்பி"... என்று கலாய்க்க.. வெட்கச் சிரிப்புடன் கவிதைகளை தொடர்ந்து வரைந்து குவிக்க.. மறக்க முடியாத நினைவு அது.. குட்டிக் குட்டியாக 15 கவிதைகளை எழுதினான்.. எல்லா பேப்பரையும் சுந்தரமூர்த்தியிடம் கொடுத்து விட்டான். அவர், இதை வைத்து நான் என்ன செய்யடா என்று கேட்க.. பக்கத்தில் உட்கார்ந்திருந்த முத்துலட்சுமி எட்டி அந்த பேப்பர்களை வாங்கி,  எல்லாவற்றையும் பொறுமையாக படித்துப் பார்த்து விட்டு, எல்லாமே சூப்பரா இருக்கு.. இதை பத்திரமா வைங்க.. தொகுத்துப் புக்காப் போடலாம் என்று சொல்ல.. அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே புல்வெளியில் மல்லாந்தான் ஆதவன்.

முதல் காதலின் செல்லப் பிள்ளைகளான அந்த கவிதைகள் வங்கக் கடலின் காற்றோடு கலந்து கரைந்தன!

(தொடரும்)


9வது பகுதி

Comments

Popular posts from this blog

வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை!

வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள்.  அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க

"நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்பா"... உலாப் போகும் உணர்வுகள் (2)

இருக்கு.. இந்த ஆஸ்பத்திரியில் நமக்கு வித்தியாசமான அனுபவம் இருக்கு என்று மனதுக்குள் ஒரு அசரீரி ஓட.. மெல்லிய சிந்தனையுடன் தனது பேகை எடுத்து கட்டில் மீது மீது வைத்து அதைத் திறந்து துணிகளை புரட்டி லுங்கியை உருவி அதைக் கட்டிக் கொண்டான் ஆதவன்.  செல்போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்து, நான் வந்துட்டேம்மா.. எல்லாம் நல்லாருக்கு. நல்ல ரூம் மேட் கிடைச்சிருக்கார் என்று கூறி விட்டு போனை கீழே வைத்தான்.  அறைக்கு வெளியே என்ன நிலவரம் என்று பார்ப்பதற்காக மெல்ல வெளியேறி வந்தான். நீண்டு கிடந்த காரிடாரில் ஒரு விதமான அமைதி. அறைகள் எல்லாம் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் உள்ளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆட்கள் இருக்கிறார்கள், அமைதியாக. ஆதவனின் அறைக்கு இடதுபுறத்தில் ஒரு அறை. அதில் அப்பா, மகள் இருப்பது தெரிந்தது. அதற்கு எதிர்புற வரிசை மூலை அறையில் ஒரு வயதான கணவன், மனைவி. கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்க்குடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆதவன் புன்னகைத்தான். பதிலுக்கு அவரிடமிருந்தும் ஒரு சின்னப் புன்னகை. "நல்லாருக்கீங்களா. இப்ப பரவாயில்லையா" "நல்லாருக்கேன் சார்.. புது

"கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்?".. உலாப் போகும் உணர்வுகள் (1)

 "என்னங்க பண்ணலாம்.. பேசாம ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆயிடுறீங்களா?" லட்சுமி அப்படிக் கேட்டபோது ஆதவனுக்கு தெளிவாக எந்த யோசனையும் வரவில்லை. மனதுக்குள் மெல்ல குழப்பம் குடியேறியது. போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை விட, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் அகிலன் நிலைமை என்னாகும் என்ற பயம்தான் முதலில் தலை தூக்கியது. கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை திரும்பப் பார்த்தான்.. சின்ன யோசனைக்குப் பிறகு " ரிஸ்க் எடுக்க வேண்டாம் லட்சுமி, ஹாஸ்பிடல் போயிடலாம்" ஆதவன் சொன்னதைக் கேட்டதும், லட்சுமிக்கும் அதுவே சரியென்று பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பேக்கிங் முடிய.. 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதவன். மனதுக்குள் இனம் புரியாத குழப்பம்.. பயமெல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குழப்பம்.. கார் மெல்ல வேகம் பிடித்து பாய்ந்து செல்ல, பின்னால் ஓடிச் சென்ற உருவங்களை உள்வாங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதவனுக்குள் எண்ணற்ற சிந்தனைகள். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதமாக.. ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு திசையில்.. அத்தனை பேரையும் வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்லாக.